திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தை: மணமக்கள், உறவினர்கள் தெறித்து ஓட்டம்

லக்னோ திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையால், இரவு முதல் அதிகாலை வரை காரிலேயே மணமக்கள் பீதியுடன் காத்திருந்த சோகம், உ.பி.,யில் நிகழ்ந்துள்ளது.

உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள எம்.எம்.லான் என்ற திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது.

ஆட்டம், பாட்டம்



அப்போது, சிறுத்தை ஒன்று திடீரென மண்டபத்துக்குள் புகுந்தது. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என இருந்தவர்கள், சிறுத்தையை பார்த்ததும், உடனடியாக தாங்கள் இருந்த அறைகளின் கதவுகளை சாத்திக் கொண்டனர்.



வளாகத்தில் உலாவியவர்கள் வெளியே ரோட்டுக்கு ஓடிச் சென்று பதுங்கி கொண்டனர். மணமக்கள் அக் ஷய் ஸ்ரீவத்சவா - ஜோதிகுமாரி ஜோடி பயத்துடன் ஓடிச்சென்று, கார் ஒன்றில் பதுங்கினர்.

திருமண மண்டபத்தில் நுழைந்த சிறுத்தையால், முதல் நாள் நடக்கவிருந்த சடங்குகள் எதுவும் நடக்காமல், மண்டபம் அல்லோலப்பட்டது.

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் ஐந்து மணி நேரம் போராடி, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சிறுத்தையை உயிருடன் பிடித்தனர்.

முன்னதாக, சிறுத்தையை பிடிக்க முயன்ற வனத்துறை அதிகாரி ஒருவரை அந்த சிறுத்தை கடித்ததில், அவர் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டச்சொட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முதல் மாடி அறை ஒன்றில் பதுங்கியிருந்த அழையா விருந்தாளி சிறுத்தை பிடிபட்டது என்ற தகவல் கிடைத்த உடன், நிம்மதி அடைந்த உறவினர்கள், அறைகளில் இருந்து மெதுவாக வெளியே வந்தனர்.

திருமண சடங்குகள்



மூடிய அறைகளின் கதவுகள், அச்சத்துடன் திறக்கப்பட்டன; காரிலிருந்து இறங்கிய மணமக்கள், உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். அதன்பின், திருமண சடங்குகள் நடந்தன.

முன்னதாக, திருமண மண்டபத்திற்குள் சிறுத்தை நுழைந்து விட்டது என அறிந்ததும், அங்கும், இங்கும் ஓடிய சிலர் தள்ளி விட்டதில், இரண்டு கேமராமேன்கள் காயமடைந்தனர்.

தப்பிச் சென்ற ஒருவர் முதல் மாடியிலிருந்து விழுந்து படுகாயமடைந்தார்.

Advertisement