ரயில்வே சாலையில் தொடரும் நெரிசல் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கடும் அவதி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853973.jpg?width=1000&height=625)
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் ராஜாஜி மார்க்கெட், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தலைமை அஞ்சலகம், மாவட்ட விளையாட்டு அரங்கம், உழவர் சந்தை, சினிமா தியேட்டர், பெட்ரோல் பங்க், திருமண மண்டபம், ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.
தாலுகா அலுவலகம், பழைய ரயில் நிலையம், பேருந்து நிலையம், சேக்குபேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி, தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவ- - மாணவியர், திருசக்கரபுரம் தெரு, ரயில்வே சாலை, பி.எஸ்.கே,, தெரு வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், பி.எஸ்.கே., தெரு, திருசக்கரபுரம் தெரு இணையும் நான்குமுனை சந்திப்பில், போக்குவரத்தை சீரமைக்க போலீசார் இல்லாததால், காலை மற்றும் மாலையில், அலுவலகம் மற்றும் பள்ளி வேலை நேரங்களில் விதிமீறி செல்லும் வாகன ஓட்டிகளால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதன் காரணமாக, நான்கு திசைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், மாணவ - -மாணவியர் பள்ளி, கல்லுாரிக்கு தாமதமாக செல்கின்றனர். மருத்துவமனை அமைந்துள்ள பகுதி என்பதால், ஒரு சில நேரங்களில் '108' ஆம்புலன்ஸ் வாகனமும் நெரிசலில் சிக்குகின்றன.
இதனால், உயிருக்கு போராடும் நோயாளிகள் குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே, ரயில்வே சாலையுடன், பி.எஸ்.கே., தெரு, திருச்சக்கரபுரம் தெரு இணையும் நான்குமுனை சந்திப்பில், காலை - மாலை அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க, போலீசாரை நியமிக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.