ஆட்டம் போடும் 13 கவுன்சிலர்கள் பதவி பறிக்க தயாராகுது நோட்டீஸ்
அடாவடி செய்வதாக ஏற்கனவே, எட்டு கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கபட்ட நிலையில், மேலும் 13 கவுன்சிலர்கள் அட்டகாசம் செய்வதாக, அரசுக்கு உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் சாலை, வடிகால், மின்கேபிள் பதிப்பு போன்ற பணிகளும், விரிவாக்க மண்டலங்களில் குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகளும் நடக்கின்றன.
இதில், அதிக கமிஷன் கேட்டு பணிகளை நிறுத்தியது, ஒப்பந்த ஊழியர்கள் மீது தாக்குதல், அதிகாரிகளை தரக்குறைவாக பேசியது, அடித்தது போன்ற புகார்கள், முதல்வர் வரை சென்றன.
இதில் சிக்கிய, தி.மு.க., - அ.தி.மு.க.,வை சேர்ந்த நான்கு கவுன்சிலர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன், கடந்த ஆண்டு ஜூலையில் நோட்டீஸ் வழங்கினார்.
இதற்கு, சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் விளக்கம் அளித்தனர். அவர்களை அழைத்து, அமைச்சர் நேரு எச்சரித்து உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, டிசம்பரில் திருவெற்றியூர், மாதவரம், அடையாறு, பெருங்குடி ஆகிய மண்டலங்களில், தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த, நான்கு கவுன்சிலர்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம் - 1998 பிரிவு 52 (1)ன்படி அளித்த நோட்டீசில், 'உங்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. உங்களை ஏன் கவுன்சிலர் பதவியில் இருந்து நீக்கக்கூடாது' என, கேட்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மணலி, அம்பத்துார், கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி ஆகிய மண்டலங்களை சேர்ந்த, 13 கவுன்சிலர்களின் ஆட்டம் அதிகரித்து உள்ளதாகவும், இதனால் மக்கள் மத்தியில் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு உள்ளதாகவும், உளவுத்துறை போலீசார் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.
இதில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மற்றும் சுயேட்சையாக வென்று தி.மு.க.,வில் சேர்ந்த கவுன்சிலர்களும் உள்ளனர். இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கனவே, எட்டு பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசியல் அழுத்தம் காரணமாக, துறை அமைச்சர் இந்த விவகாரத்தை கிடப்பில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மீண்டும் 13 பேருக்கு விளக்கும் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இதுவும் எச்சரிக்கையோடு முடியுமா; பதவி பறிப்பு நடவடிக்கை வரை போகுமா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-- நமது நிருபர் -