2,000 ஊராட்சிகளில் செயலர்கள் இல்லை அத்தியாவசிய பணிகள் பாதிப்பதாக புகார்

மதுரை,:'செயலர்கள் இல்லாத 2,000 ஊராட்சிகளில் அடிப்படை பணிகள் முடங்குவதால், பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்' என, ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், 12,525 ஊராட்சிகள் உள்ளன. இதில், ஒன்பது மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம், கடந்த டிசம்பருடன் முடிவுக்கு வந்தது.

ஒன்றியங்களில் உள்ள பி.டி.ஓ.,க்கள் சிறப்பு அதிகாரிகளாக பொறுப்பேற்று, ஊராட்சிகளை கண்காணிக்கின்றனர். ஊராட்சி தலைவர்கள் இல்லாத நிலையில், அங்குள்ள செயலர்கள் பணிகளை செயல்படுத்துகின்றனர்.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் 2,000க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஊராட்சிகளில் வரி வசூல் செய்வது, குடிநீர், குப்பை அகற்றம், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய பணிகளை கவனிப்பது இவர்களின் பணி. இப்பணியிடங்கள் காலியாக உள்ளதால், அருகில் உள்ள பிற ஊராட்சி செயலர்கள் கூடுதல் பணியாக சேர்த்து பார்க்கின்றனர்.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சார்லஸ் கூறுகையில், “ஊராட்சி செயலர், துாய்மை பணியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். செயலர்களுக்கு ஊராட்சி வாயிலாக சம்பளம் வழங்காமல், பி.டி.ஓ.,க்கள் வாயிலாக வழங்க வேண்டும்,” என்றார்.

Advertisement