போதை விழிப்புணர்வு குறும்பட போட்டி டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி முதலிடம்

சென்னை, சென்னையில் உள்ள கல்லுாரி மாணவர்களுக்கு இடையே போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் உருவாக்கும் போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில், எட்டு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள், 23 குறும்படங்களை உருவாக்கி சமர்ப்பித்து இருந்தனர். அதில் சிறந்த மூன்று குறும்படம் தயாரித்த மாணவ குழுவினருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்தில், நேற்று நடந்தது.

இதில், முதல் பரிசு அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரியைச் சேர்ந்த சூரியன் குழுவினர் பெற்றனர்.

அவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்ற அடையாறு பெட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியைச் சேர்ந்த கார்த்திக் குழுவினருக்கு 50,000 ரூபாயும், நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி., கல்லுாரி ராஜேஸ்வரி குழுவினருக்கு, 10,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

விருதாளர்களை பாராட்டி டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

பின் அவர் கூறுகையில், ''கல்லுாரி மாணவர்கள் ஆர்வமுடன் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு குறும்படத்தை உருவாக்கி உள்ளது பாராட்டுதலுக்குரியது.

''மாணவர்கள் உருவாக்கிய விழிப்புணர்வு குறும்படங்களை தமிழக திரையரங்குகளில் திரையிட்டு, அதன் வாயிலாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

Advertisement