கால்வாய்களை மேம்படுத்த ரூ.29 கோடி தண்டையார்பேட்டை மண்டல குழுவில் தீர்மானம்
தண்டையார்பேட்டை,தண்டையார்பேட்டை மண்டல குழு கூட்டத்தில், 29 கோடி ரூபாய் செலவில், கேப்டன் காட்டன் கால்வாய் உட்பட பல்வேறு கால்வாய்களை மேம்படுத்தும் பணிக்கான தீர்மானங்கள் நிறைவேறின.
தண்டையார்பேட்டை மண்டல குழு கூட்டம், நேற்று காலை, தி.மு.க., மண்டல குழு தலைவர் நேதாஜி யு. கணேசன் தலைமையில் நடந்தது. இதில், மண்டல உதவி கமிஷனர் சரவணமூர்த்தி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பிற துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தி.மு.க., --- காங்., -- ம.தி.மு.க., -- கம்யூ., கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள், தங்கள் வார்டின் அடிப்படை தேவைகள் மற்றும் தீர்மானங்கள் குறித்து பேசினார்.
இக்கூட்டத்தில், 34, 35, 36, 37, 41, 44, 45 ஆகிய வார்டுகளில், கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் மேம்படுத்துதல் மற்றும் வெள்ளத் தடுப்பு சுவர் பணிகள் குறித்த, 29 கோடி ரூபாய் மதிப்பிலான, தீர்மானங்கள் நிறைவேறின.
மேலும், 38 வது வார்டில், கருணாநிதி நகர், மூன்றாவது தெருவில் 1.85 கோடி ரூபாய் செலவில் சமுதாய கூடம் கட்டும் பணி, 34 வது வார்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி, மழைநீர் தேக்கத்தை தடுக்கும் பணி மற்றும் தெரு பலகைகள் அமைத்தல் உள்ளிட்ட, 50 லட்சம் ரூபாய் பணிகள் உட்பட, 49 கோடி ரூபாய் செலவிலான பணிகளை செயல்படுத்த, 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.