மவுலிவாக்கம் காவல் நிலையம் செயல்பாட்டிற்கு வருவது எப்போது?
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3854009.jpg?width=1000&height=625)
குன்றத்துார்:ஆவடி காவல் ஆணையரகம், போரூர் சரகம் கட்டுப்பாட்டில் மாங்காடு காவல் நிலையம் உள்ளது. மாங்காடு காவல் நிலையத்தின் எல்லை பரப்பு, பெரிய அளவில் உள்ளது.
இதனால், முகலிவாக்கம், மவுலிவாக்கம், மதனந்தபுரம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் குற்றங்கள் நடந்தால், காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் நேரில் புகார் அளிக்கவும், போலீசார் சம்பவ இடத்திற்கு வரவும் காலதாமதம் ஆகிறது.
இதனால், மாங்காடு காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, மவுலிவாக்கத்தில் புதிய காவல் நிலையம் அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று, மாங்காடு காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, மவுலிவாக்கதத்தில் புதிய காவல் நிலையத்திற்கான கட்டடம், 2023ல் அமைக்கப்பட்டது. 'மவுலிவாக்கம் காவல் நிலையம்' என, பெயர் பலகை வைக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால், தற்போது வரை மவுலிவாக்கம் காவல் நிலையம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. மவுலிவாக்கம் காவல் நிலையம் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர, அப்பகுதியினர் எதிர்பார்கின்றனர்.