27 லட்சம் 'சிம்' கார்டுகளை முடக்க முடிவு

பாட்னா, போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி அரங்கேற்றப்படும் மோசடிகளால், பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதுடன், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

நாடு முழுதும் இதுபோன்ற மோசடி சம்பவங்கள் நடந்தாலும், பீஹாரில் இது அதிகமாக நடப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் விதிகளின்படி, ஒரு நபர் அதிகபட்சமாக ஒன்பது சிம் கார்டுகள் மட்டுமே அவரது பெயரில் வைத்து கொள்ள முடியும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பீஹாரில் ஆயிரக்கணக்கானோர் ஒன்பது சிம் கார்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் பல, மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாக அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து, பயனர்களின் சிம் கார்டு எண்ணிக்கையை கட்டுப்படுத்த பீஹார் அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த மூன்று மாதங்களில், அங்கு பயன்பாட்டில் உள்ள 27 லட்சம் சிம் கார்டுகளின் செயல்பாட்டை முடக்க மாநில தொலைதொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய விதி குறித்து பயனர்களுக்கு தெரிவிக்கவும் தொலைத்தொடர்பு ஆப்பரேட்டர்கள் அறிவுறுத்தப்பட்டுஉள்ளனர்.

Advertisement