திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச நபருக்கு மும்பையில் சொந்த வீடு; விசாரணையில் போலீசார் அதிர்ச்சி

திருப்பூர்: முறைகேடாக தங்கியிருந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட வங்கதேச நபருக்கு, மேற்கு வங்கம் மற்றும் மும்பையில் சொந்தமாகவே வீடு இருப்பது தெரியவந்ததால், போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வடமாநிலத்தினர் போர்வையில் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களில் வங்கதேசத்தினர் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவு பிரிவு போலீசார் எச்சரித்தனர். இதனால், ஆறு மாதமாக மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம், மாநகர பகுதியில் வங்கதேசத்தினர் ஊடுருவியது தொடர்பாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒன்றரை மாதத்தில் மட்டும் திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் என, மாவட்டம் முழுதும் முறைகேடாக தங்கியிருந்த, 107 வங்கதேச நாட்டினரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சமீபத்தில், நல்லுார் போலீஸ் எல்லையில், இரு ஆண்டுகளாக தங்கியிருந்த முகமது செரீப் காஜி, 36, கைது செய்யப்பட்டார். தற்போது, அவர் ஜாமினில் வெளியே வந்து, அன்றாடம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி, கையெழுத்திட்டு வருகிறார். அவரின் பின்புலம் குறித்த விசாரணையில், அவருக்கு மேற்கு வங்க மாநிலம் மற்றும் மும்பையில் சொந்த வீடு இருப்பது தெரிய வந்ததால், போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
போலீசார் கூறியதாவது: முறைகேடாக தங்கியிருப்பது தொடர்பாக கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் குறித்து விசாரிக்கும் போது, சில சமயம் அதிர்ச்சி ஏற்படும் வகையில் தகவல்கள் கிடைக்கின்றன. முகமது செரீப் காஜி என்பவர், திருப்பூருக்கு வந்து, 17 ஆண்டுகளாகிறது.
பல்லடம், சிட்கோ போன்ற பகுதியில் வசித்து வந்தார். மேற்கு வங்க மாநிலம் வழியாக நம் நாட்டிற்குள் நுழைந்தார். மேற்கு வங்கம், மும்பையில் சொந்தமாக அவருக்கு வீடு உள்ளது. தவிர, தமிழகத்தில் ரேஷன் கார்டு, பான் கார்டு, ஆதார் போன்ற அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ளார்.
இவரை போல, பலரும் திருப்பூரில் பனியன் நிறுவனம், பேன்ஸி கடை, பானிபூரி கடை போன்றவற்றை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற நபர்களை எளிதாக அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.



மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி இன்று ஆரம்பம்; சாதிக்குமா இந்திய அணி?
-
சி.பி.எஸ்.இ., மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ப்பு
-
18 படிகளில் ஏறியதும் நேரடி ஐயப்ப தரிசனம்: மார்ச் 14 முதல் 6 நாட்கள் சோதனை முறையில் அமல்
-
ஆட்டோவில் செல்ல செயலி; 1.5 கி.மீ.,க்கு ரூ.50 கட்டணம்?
-
சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
-
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு