பிப்., 26ல் மத்திய அமைச்சர் அமித் ஷா ராமநாதபுரம் வருகை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே புதிய பா.ஜ., மாவட்ட அலுவலகத்தைதிறந்து வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும்26ல் ராமநாதபுரம் வருகிறார். பிப்., 28ல் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வர உள்ளதாகவும் பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் பழமை வாய்ந்த ரயில்வே துாக்கு பாலத்திற்கு பதிலாக, ரூ.550 கோடியில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. கடலில் இருந்து 17 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தில் சோதனை ஓட்டம் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் கட்டப்பட்டிருக்கும் பா.ஜ., கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகம் வருகிறார். அதேபோல, வரும் 28ல், பாம்பனில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்க பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.,தலைவர் முரளிதரன் கூறுகையில், ''மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ராமேஸ்வரம்வர உள்ளனர். இரு நிகழ்ச்சிகளைசிறப்பாக நடத்துவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது,'' என்றார்.

Advertisement