திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு
திருவாடானை : திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை உயர்த்தி கட்டியதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் இலவச சட்ட உதவி மையத்தில் புகார் அளித்ததால் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. இக்கண்மாய் பகுதியில் குளத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் விவசாயம் செய்கின்றனர்.
இந்த ஆண்டு பெய்த கனமழையால் கண்மாயில் நீர் தேங்கி நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து குளத்துார் கிராம விவசாயிகள் திருவாடானை நீதிமன்றத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தில் புகார் அளித்தனர்.
அதில், திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை வழக்கமான அளவை காட்டிலும் உயர்த்தி கட்டியதால் நீர் மட்டம் உயர்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டது.
எனவே கலுங்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இதனை தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று திருவாடானை தாசில்தார் அமர்நாத், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்தமிழ் அரசன் ஆகியோர் இலவச சட்ட உதவி மையத்தில் ஆஜராயினர். நீதிபதி மனிஷ்குமார் விசாரணை செய்தார்.
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இது சம்பந்தமாக வரும் ஏப்.9 ல் அதிகாரிகள் ஆஜாராக உத்தரவிடப்பட்டது.