சனீஸ்வரர் பெயரில் பண மோசடி கோவில் குருக்கள், பெண் மீது வழக்கு

காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பெயரில் போலி இணையதளம் துவக்கி, பக்தர்களிடம் பண மோசடி செய்த கோவில் குருக்கள் மற்றும் ஒரு பெண் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால், திருநள்ளாரில் உள்ள சனீஸ்வரர் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. பரிகார ஸ்தலமான இக்கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக, www.thirunallarutemple.org என்ற இணையதளத்தை கோவில் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது.

பக்தர்கள் சனீஸ்வர பகவானுக்கு பூஜை செய்ய, இந்த இணையதள முகவரி மூலம் கட்டணம் செலுத்தினால், பூஜை செய்த பிரசாதத்தை பக்தர்கள் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் சுப்ரமணியன் என்ற பக்தர் கடந்த 21.1.2024ல் அஷ்டோத்திர அர்ச்சனை செய்ய வேண்டி ரூ.981ஐ கோவில் இணையதள முகவரிக்கு அனுப்பியதாகவும், இதுவரை அர்ச்சனை பிரசாதம் கிடைக்கவில்லை என இ-மெயில் மூலம் கோவில் நிர்வாகத்திற்கு புகார் அனுப்பினார். அதேபோல் சென்னையை சேர்ந்த மகாதேவன் என்பவர், அர்ச்சனை செய்ய வேண்டி ரூ.4500 செலுத்தியும் பிரசாதம் வரவில்லை என புகார் தெரிவித்தார்.

கோவில் நிர்வாகம் மாதம் ஒருமுறை செய்யும் அஷ்டோத்திர அர்ச்சனைக்கு ஆண்டிற்கு ரூ.350 மற்றும் சனிக்கிழமை செய்யும் பூஜைக்கு ஆண்டிற்கு ரூ.1000 பெறப்பட்டு வருகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த கோவில் நிர்வாகம் விசாரித்ததில், கோவில் இணையதளத்தை போலியாக உருவாக்கி மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அதே கோவிலில் குருக்களாக உள்ள, திருநள்ளார் சன்னதி தெருவை சேர்ந்த வெங்கடேஸ்வர குருக்கள், பெங்களூரு இந்திரா நகரை சேர்ந்த ஜனனிபரத் ஆகிய இருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

சாய் பவுண்டேஷன் சர்வீஸ் மூலம் பெங்களூரு முகவரியிலிருந்து, சனீஸ்வரர் கோவில் பெயரில் போலியாக இணையதளத்தை சென்னையை சேர்ந்த ஒருவர் துணையோடு உருவாக்கி உள்ளனர். இந்த இணையதளம் மூலம், கோவிலில் பூஜை செய்து பிரசாதம் அனுப்புவதாக கூறி, பக்தர்களிடம் பணத்தை பெற்று, மோசடி செய்துள்ளனர்.

அதையடுத்து, வெங்கடேஸ்வர குருக்கள், ஜனனிபரத் ஆகிய இருவர் மீது மோசடி, போலி இணையதள முகவரி உருவாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement