கள்ளக்காதலியுடன் ஓடிய கணவர் நடுரோட்டில் 2 பெண்கள் அடிதடி

1

பெலகாவி: வேறு ஒரு பெண்ணுடன் ஓடிய கணவருக்காக, கிராம பஞ்சாயத்து உறுப்பினரான மனைவியும், கள்ளக் காதலியும் அடிதடியில் ஈடுபட்டனர்.

பெலகாவியின் மாரிஹாளா கிராமத்தின் பஞ்சாயத்து உறுப்பினர் வாணிஸ்ரீ, 28. இவரது கணவர் பசவராஜ் சீதிமனி. மனைவியை அலட்சியப்படுத்திய இவர், அதே கிராமத்தை சேர்ந்த மாசாபி சையத் என்ற பெண்ணை காதலித்தார். இதையறிந்த மனைவி, கணவரை கண்டித்தார். அவர் திருந்தவில்லை. இவ்விஷயத்தை ஊராரிடம் தெரிவித்து, நியாயம் கேட்பதாக வாணிஸ்ரீ எச்சரித்தார்.

இதனால், சில மாதங்களுக்கு முன் மாசாபி சையத்தும், பசவராஜும் இரவோடு இரவாக ஊரை விட்டு ஓடினர். இது குறித்து, மாரிஹாளா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த வாணிஸ்ரீ, தன் கணவரை கண்டுபிடித்து தரும்படி வேண்டினார். போலீசார் தேடியும், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

தங்களை மறந்திருப்பர். சூழ்நிலை மாறி இருக்கும் என, நினைத்த பசவராஜ், மாசாபியுடன் கிராமத்துக்கு திரும்பி, வேறொரு இடத்தில் வசிக்க துவங்கினர். ஆனால் நேற்று முன்தினம் இரவு, பெலகாவியின் கொல்லாபுரா சதுக்கத்துக்கு வந்த போது, முதல் மனைவி வாணிஸ்ரீயிடம் இருவரும் சிக்கினர்.

இருவரையும் வழி மறித்து, வாணிஸ்ரீ நியாயம் கேட்டார். இவருக்கும், மாசாபிக்கும் வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் தலைமுடியை பிடித்து நடு ரோட்டில் அடித்து கொண்டனர். அப்போது பசவராஜும், வாணிஸ்ரீயை தாக்கினார்.

இதை பார்த்த அப்பகுதியினர், சண்டையை விலக்கி விட்டு, புத்திமதி கூறி மூவரையும் அனுப்பினர். கணவர் மீது மீண்டும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய வாணிஸ்ரீ முடிவு செய்துள்ளார்.

Advertisement