கம்பமெட்டில் லாரி டிரைவர்கள் மறியல் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு

கம்பம்,: கம்பத்திலிருந்து கேரளாவிற்கு சென்ற டிப்பர் லாரி டிரைவரை, கேரள போலீசார் அடித்து கைது செய்ததால், கம்பம் பகுதி டிப்பர் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் மாநில எல்லையோரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டத்திலிருந்து தினமும் கேரளாவிற்கு டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று மாலை டிப்பர் லாரி ஒன்று சென்ற போது, கம்ப மெட்டில் கேரள இன்ஸ்பெக்டர் சமீர்கான் லாரியை நிறுத்தியுள்ளார். லாரி டிரைவர் கம்பம் அப்பாஸ் என்பவர் லாரியை விட்டு இறங்கி வந்து ஆவணங்களை காட்டியுள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர், அவரை அடித்து கைது செய்துள்ளார்.

தகவல் அறிந்து கம்பம் பகுதி டிப்பர் லாரி டிரைவர்கள், தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்தவர்கள் கம்பமெட்டு சென்று அங்கு இரு மாநில எல்லையோரத்தில் மறியல் செய்தனர். இதனால் இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்கோட்டு வேலன் மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கேரள போலீசாரும், டிப்பர் லாரி டிரைவரும் ஒருவரையொருவர் பரஸ்பர குற்றம் சாட்டினர். எனவே லாரியில் இருக்கும் சிசிடிவி , போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பின் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. கூறினார்.

Advertisement