ஊஞ்சல் கட்டிய சேலையில் கழுத்து இறுக்கி சிறுவன் பலி

ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே புலவர்பாளையத்தை சேர்ந்தவர் ரகுபதி, 36; கட்டட மேஸ்திரி; இவரது மனைவி கல்பனா, 29; தம்பதியருக்கு பிரனீஸ், 13, மவுனீஸ், 11, என, இரண்டு மகன்கள். இதில் மவுனீஸ், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். ரகுபதி, நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி, நாமக்கல்லில் உள்ள உறவினரின் விசேஷத்திற்கு சென்றுவிட்டார்.


பிரனீஸ், நண்பர்களுடன் வெளியில் விளையாட சென்ற நிலையில், வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி சிறுவன் மவுனீஸ் விளையாடியுள்ளார். அப்போது, சேலை அவரது கழுத்தில் சுற்றி இறுக்கியதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்துள்ளார். வேலை முடிந்த ரகுபதி, மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, பேச்சு மூச்சின்றி ஊஞ்சல் கட்டிய சேலையில் தொங்கியபடி இருந்த மவுனீசை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சிறுவன் மவுனீசை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள், மவுனீஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement