கலெக்டர் கார் கண்ணாடி உடைத்த வாலிபர் கைது

திண்டுக்கல், : நில பிரச்னையை தீர்த்து வைக்க கோரி கொடுத்த மனுவுக்கு தீர்வு காணாததால், கலெக்டர் கார் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி, ஆயக்குடி அமர பூண்டியை சேர்ந்தவர் கணேசன், 34. சில ஆண்டுகளுக்கு முன், 3 சென்ட் நிலம் வாங்கினார். குடும்ப தேவைகளுக்காக நிலத்தை வைத்து வங்கியில் கடன் கேட்க சென்றார். அப்போது, வங்கி ஊழியர்கள், 'நிலத்திற்கு பட்டா இல்லை' என்றனர்.

இது தொடர்பாக, கணேசன், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பிப்., 10ல் நடந்த குறைதீர் கூட்டத்தில், நிலத்திற்கு தடையில்லா சான்று கேட்டு மனு கொடுத்தார். அதிகாரிகள் முறையாக விசாரிக்காத நிலையில், கணேசன் விரக்தி அடைந்தார்.

நேற்று நடந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்த கணேசன், பிரச்னைகளுக்கு தீர்வு காணாத அதிகாரிகள் மீது ஆத்திரத்தில் இருந்தார். தொடர்ந்து மாலை, 6:30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வந்த கணேசன், கலெக்டர் காரின் முன் பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement