அனந்தா என்ற பெயருடன் பெங்களூருவில் பிரமாண்ட அலுவலகம் திறந்தது கூகுள்!

7

பெங்களூரு: பெங்களூருவில், 16 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட பிரமாண்டமான அலுவலகத்தை கூகுள் நிறுவனம் திறந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு அனந்தா என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.



அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான கூகுளுக்கு உலகத்தின் பெரும்பாலான முக்கிய நாடுகளில் அலுவலகம் உள்ளது. இங்கு லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் இந்த நிறுவனத்தில் 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனம் பெங்களூருவில் புதிதாக கட்டிய புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. மஹாதேவ்புரா பகுதியில் 16 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தில் 5 ஆயிரம் பேர் பணியாற்ற முடியும். இந்த கட்டடத்திற்கு அனந்தா என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதற்கு சமஸ்கிருதத்தில்,'எல்லையில்லாதது ' என அர்த்தம் ஆகும்.



இந்த அலுவலகத்தில் எரிசக்தி பயன்பாட்டை குறைக்கும் வகையில் 'ஸ்மார்ட் கிளாஸ்' பொருத்தப்பட்டு உள்ளது. கழிவு நீரை 100 சதவீதம் மறுசுழற்சி செய்து பயன்படுத்தவும், மழைநீரை சேகரிக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், இங்கு நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்யவும் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கொண்டே கட்டமைக்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலும் பல ஏற்பாடுகள் இந்த அலுவலகத்தில் செய்யப்பட்டு உள்ளது.

கூகுளின் ஆண்டிராய்டு, தேடுதல், 'மேப்' உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் இங்கு பணியாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement