20 ஆயிரம் விமானிகள் தேவை: மத்திய அமைச்சர் தகவல்

1

புதுடில்லி: இந்தியாவில் வரும் ஆண்டுகளில் குறைந்தது 20,000 விமானிகள் தேவைப்படுவர் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் மேலும் 50 விமான நிலையங்கள் உருவாகி இருக்கும் என்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறினார்.



டில்லியில் விமானிகளுக்கான மின்னணு பணியாளர் உரிமம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இங்குள்ள உடான் பவனில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர் வும்லுன்மாங் வுல்னம் மற்றும் டிஜிசிஏ இயக்குநர் ஜெனரல் (டிஜி) பைஸ் அகமது கித்வாய் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேசியதாவது:

உலகின் வேகமாக வளர்ந்து வரும் விமான சந்தைகளில் ஒன்றான நம் நாட்டில் அதிகரித்து வரும் விமானப் பயணத் தேவையைப் பூர்த்தி செய்ய வரும் ஆண்டுகளில் இந்தியாவிற்கு குறைந்தது 20,000 விமானிகள் தேவைப்படுவர்.
விமான போக்குவரத்து எப்போதும் இணைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு முதுகெலும்பாக இருந்து வருகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் மேலும் 50 விமான நிலையங்கள் இருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 157 ஆக இரட்டிப்பாகியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement