'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு ஆசிரியர்கள் தடுமாற்றம்

4



'நீட்' தேர்வு விண்ணப்பப் பதிவின் போது அடிக்கடி, 'எரர்' ஏற்படுவதால், ஆசிரியர்களே தடுமாறும் நிலையில், அரசு பள்ளி மாணவ - மாணவியர் நிலை பரிதாபமாக உள்ளது.


எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவுத் தேர்வு, தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு, நீட் தேர்வு, மே, 4ல் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த, 7ல் துவங்கியது. மார்ச், 7 வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. ஆனால், நடப்பு ஆண்டு விண்ணப்பப் பதிவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


ஏ.பி.சி., - ஐ.டி., புகைப்பட பதிவேற்றம், கையொப்பம், கைரேகை பதிவேற்றம் ஆகியவற்றில் பலமுறை, 'எரர்'களாக வருவதால், ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் பல மணி நேரம் போராட வேண்டியுள்ளது.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறியதாவது:



நடப்பாண்டு நீட் விண்ணப்பத்தில், புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. தனியார் பயிற்சி மையங்கள், தனியார் பள்ளிகளில், பள்ளியிலோ, வீட்டிலோ பதிவு செய்கின்றனர். அரசு பள்ளி மாணவர்கள், பள்ளியில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதன் விபரங்கள் குறித்து ஆசிரியர்கள் தெரிவிக்கவில்லை. குறிப்பாக விண்ணப்பம் பதிவு செய்ய ஆசிரியர்களே தடுமாறுகின்றனர்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்தவே தடுமாறும் அரசு பள்ளி மாணவர்கள், 'பிரவுசிங்' சென்டர்களுக்கும், பல நுாறு ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. அதனால், அனைத்து மாணவர்களுக்கும், பள்ளிகளில் விண்ணப்ப பதிவு செய்து தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.




- நமது நிருபர் -

Advertisement