ஆன்லைனில் ஸ்கேன் கட்டணம்; அரசு மருத்துவமனைகளில் கட்டாயம்

2



'அரசு மருத்துவமனைகளில், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., பரிசோதனை கட்டணங்களை, ஆன்லைனில் மட்டுமே வசூலிக்க வேண்டும்' என, மருத்துவ சேவைகள் கழகம் அறிவுறுத்தியுள்ளது.


தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., பரிசோதனையும், மாவட்ட தலைமை மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளில், சி.டி., ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்படுகிறது.



சி.டி., ஸ்கேன் எடுக்க ஒரு பகுதிக்கு, 500 ரூபாய், எம்.ஆர்.ஐ.,க்கு, 2,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. எம்.ஆர்.ஐ., பரிசோதனை மருத்துவ காப்பீட்டு திட்டத்திலும் எடுக்கப்படுகிறது. பரிசோதனை கட்டணங்களை ஆன்லைன், ஏ.டி.எம்., கார்டு, ரொக்கமாகவும் செலுத்தலாம் என, மருத்துவ சேவைகள் கழகம் அறிவித்தது.

அதன்பின், ஆன்லைனில் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டது. நோயாளிகளின் நலன் கருதி ரொக்கமாகவும் கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என, மருத்துவமனை நிர்வாகங்களிடம் இருந்து கோரிக்கை எழுந்ததால், ரொக்கமாகவும் வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.


தற்போது ஆன்லைன், ஏ.டி.எம்., கார்டு வாயிலாக மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என, மருத்துவ சேவைகள் கழகம் அறிவித்து, மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒவ்வொரு வாரமும் ஆன்லைன் கட்டணம் குறைவாக வசூலான மருத்துவமனைகளை, மாவட்ட வாரியாக கணக்கெடுத்து, அவர்களை சிவப்பு பட்டியலில் வைத்து மொத்த பட்டியல் வெளியிடப்படுகிறது. தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற அச்சத்தில், ஊழியர்களும் ஆன்லைனில் மட்டுமே கட்டணங்களை வசூலிக்கின்றனர்.



இதனால், நோயாளிகளுக்கும், ஊழியர்களுக்கும் தினமும் பிரச்னை ஏற்படுகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறுவது அவசியமாக இருந்தாலும், நோயாளிகளின் நலன் கருதி, பரிசோதனை கட்டணங்களை ரொக்கமாகவும் வசூலிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.




--நமது நிருபர் -

Advertisement