அபராதம் செலுத்தாத குடிகார வாகன ஓட்டிகளுக்கு சிறை 

கோவை; மாநகரில் நிலுவையில் உள்ள 'டிரங்க் அண்ட் டிரைவ்' வழக்குகளில் அபராதம் செலுத்தாமல் இருக்கும் நபர்களுக்கு, சிறை தண்டனை விதிக்கப்படும் என, போக்குவரத்து போலீசார் எச்சரிக்கின்றனர்.

மாநகர பகுதிகளில் வாகன விபத்துகள் நடப்பதை தவிர்க்க, முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை மேற்கொள்கின்றனர். அதில், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது, தக்க சட்டப்பிரிவுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டு, அபராத தொகை ஆன்லைன் மூலமாக வசூலிக்கப்படுகிறது.

அதில், குடிபோதையில் வாகனத்தை இயக்கியவர்கள் (டிரங்க் அண்ட் டிரைவ்) மீது மோட்டார் வாகன சட்டப்படி பதியப்படும் வழக்குகள் பல முடிக்கப்படாமல், நிலுவையில் உள்ளன.

இதை விரைந்து முடிக்க, கடந்த பிப்.,1ம் தேதி முதல் கோவை பி.ஆர்.எஸ்., வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை, நடமாடும் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

இதில் தற்போது வரை 1442 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ. 1.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

அபராதம் செலுத்தாத நபர்களுக்கு, நீதிமன்றம் வாயிலாக சம்மன் அனுப்பப்படுகிறது. அதன் பின்னரும் ஆஜராகாமல் இருப்போருக்கு, ஆறு மாதம் வரை சிறை தண்டணை வழங்கும் நடவடிக்கையையும், போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குடிபோதையில், வாகனம் ஓட்டிய வழக்கில் சிக்கிய நபர்கள், நடமாடும் நீதிமன்றத்தை அணுகி அபராதத்தை செலுத்திக்கொள்ள வேண்டும் என, போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொள்கின்றனர்.

Advertisement