நுங்கம்பாக்கம் வியாபாரி வீட்டில் ரூ.1.5 கோடி நகை திருடிய டிரைவர்

சென்னை:நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, ஐந்தாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சுலைமான், 67; வர்த்தகர். கடந்தாண்டு டிச.,21ல், குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.

ஜன., 3ல் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பீரோவை பார்த்தபோது, அதிலிருந்த, 1.50 கிலோ எடையிலான தங்க நகைகள், 50 கேரட் வைர நகைகள், 10 லட்சம் ரொக்கம், மடிக்கணிணி, விலை உயர்ந்த மூன்று கை கடிகாரம் மற்றும் ஐ - போன் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு 1.5 கோடி ரூபாய்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

இதில், கார் ஓட்டுநரான நேபாளத்தைச் சேர்ந்த சந்திர பரேயர், 31, அவரது நண்பர்களுடன் சேர்ந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது.

நேற்று கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 14.3 கிராம் தங்க நகைகள், 1.70 கிராம் வைர கற்கள், மடிக்கணிணியை பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாக உள்ள கார் ஓட்டுநரின் கூட்டாளிகள் நான்கு பேரை, இரு தனிப்படைகள் அமைத்து, போலீசார் தேடிவருகின்றனர்.

Advertisement