அரசு மீதான கோபத்தை பாடல்களாக தெறிக்க விடும் அரசு ஊழியர்கள்

1

சென்னை:தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாததால், அரசின் மீது கடும் கோபத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் கோபத்தை பாடல்களாக, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்புக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அதை நம்பி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். தி.மு.க., ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகளாகியும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அரசு மீதான தங்கள் கோபத்தை, பாடல்கள் வழியே வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் அதிகம் பகிரும் பாடல்கள்



இன்னைக்கு சொல்வாங்க, நாளைக்கு சொல்வாங்க, ஏக்கத்தோடு காத்திருக்கிறோம் வருடக் கணக்கில... பென்ஷன் திட்டம் எப்போ வரும் தமிழகத்தில... வாழ்க்கை யின் ஆணிவேரை அசைத்து பிடுங்கி விட்டு, சொன்ன சொல்லை மறந்து விட்டு, நிதிச்சுமை காட்டுறீங்க... புதிதாய் ஒன்றும் கேட்கவில்லை; இருந்ததைத்தான் கேட்கிறோம்.

மரியாதை குறையாமலே மானத்தோடு வாழ்ந்து விட்டோம்... ரிட்டையர்டு ஆன பின்னே மற்றவர்கள் தயவினிலே... தன்மானம் காத்துக்கொள்ள சன்மானம் எதுவுமின்றி, தள்ளாடி தடுமாறி தவித்து நிற்போம் தனிமையிலே...

எம்.எல்.ஏ., - எம்.பி., என்று எல்லாருக்கும் பென்ஷன் உண்டு. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., எல்லாருக்கும் பென்ஷன் உண்டு. அரசாங்க வேலை என்றால், அனைவரும் சமம் தானே. வித்தியாசம் காட்டுறீங்க... வேதனையை மூட்டுறீங்க...

இதுபோல, பல பாடல்களை ஒலிக்க விட்டு உள்ளனர்.

Advertisement