தடாகம் மண் கொள்ளை; சிறப்பு குழுவினர் அதிரடி

தொண்டாமுத்தூர்; கோவையில், மண் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், அவ்வழக்கில் தொடர்புடையவர்கள் வீட்டில், சிறப்பு புலனாய்வு குழுவினர் சோதனை நடத்தி, பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

கோவையில், பேரூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக மண் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை மாநில குற்ற ஆவண காப்பக எஸ்.பி., நாகஜோதி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர், கோவையில் தற்காலிக முகாம் அமைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இக்குழுவினர், மண் கொள்ளை வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய, ஆலாந்துறையை சேர்ந்த ஹரி, செந்தில், தொம்பிலிபாளையத்தை சேர்ந்த ராஜன், ஜெயக்குமார் மற்றும் கரடிமடை பகுதியில் ராமச்சந்திரன் ஆகியோரின் வீடுகளில், சிறப்பு புலனாய்வு குழுவினர், நேற்று சோதனை செய்தனர்.

அவர்களிடம் உள்ள வாகனங்கள், நில ஆவணங்களை இரவு, 7:00 மணி வரை பரிசோதித்தனர். சோதனையில், நிலம் மற்றும் வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் பணத்தை கைப்பற்றியுள்ளனர்.

Advertisement