எழுத்து வடிவம் உள்ள மொழி தான் வளரும் முன்னாள் துணைவேந்தர் பேச்சு

சிவகங்கை:'எழுத்து வடிவம் உள்ள மொழி தான் வளர்ச்சி பெறும்,'' என சிவகங்கையில் நடந்த நுாலக விழாவில் சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் எஸ்.கவுரி பேசினார்.

அவர் பேசியதாவது, லத்தீன், ஜெர்மன், பிரெஞ்ச், கிரேக்கம் போன்றவற்றில் இருந்து பல வார்த்தைகளை எடுத்து தான் ஆங்கிலமானது. மலேசியாவில் மலேயா பேசுவார்கள். ஆனால், எழுத்து வடிவம் ஆங்கிலம் தான். அதில் பல வார்த்தைகள் சமஸ்கிருதம், தமிழில் இருந்து எடுத்தவை.

எந்த மொழியையும் சாராத ஒரே மொழி தாய்மொழி மட்டுமே. இந்தியாவில் இருக்கும் மொழிகளிலேயே தமிழ் மட்டும் தான் செம்மொழியாக அன்று முதல் இன்று வரை பேசப்படுகிறது.

எந்த மொழிக்கு எழுத்துவடிவம் இருக்கிறதோ அந்த மொழி தான் வளர்ச்சி பெறும். எழுத்து வடிவிலான மொழி புத்தக வடிவில் வருவது இன்னும் வளர்ச்சி பெற செய்யும்.

புத்தகத்தை ஈடுபாட்டுடன் படித்தால், அது புதிய உலகத்திற்கே அழைத்து செல்லும். கதைகள் மூலம் தான் மாணவர்களிடத்தில் புத்தகத்தை அதிகளவில் படிக்க துாண்ட வேண்டும்.

ஐ.ஐ.டி.,யில் படிக்கும் போது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசி வளர்ந்தேன். பல மொழிகள் கற்பது மற்றவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். சிங்கப்பூர் போன்று புத்தகம் படிப்பதை ஊக்கப்படுத்தும் நாடு வேறு எங்கும் இல்லை.

அந்த அரசு அனைவரும் புத்தகம் படிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. யு.பி.எஸ்.சி., போன்ற போட்டி தேர்வுகளை சந்திக்க புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும், என்றார்.

Advertisement