மகளிர் நில உடைமை திட்டம் கூடுதல் நிதி ஒதுக்குமா அரசு?

சென்னை:நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ், அதிக பயனாளிகள் பயன்பெற, வரும் நிதியாண்டில், அரசிடம் கூடுதல் நிதி கேட்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் நிலமற்ற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள், 408 பேர் நிலம் வாங்க, நடப்பு நிதியாண்டில், 19.98 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பம் அதிகம் வருவதால், வரும் நிதியாண்டில் கூடுதல் நிதி ஒதுக்கும்படி, அரசிடம் கேட்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, தாட்கோ அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூக மக்கள் பயனடையும் வகையில், தாட்கோ வாயிலாக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இவற்றில், மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற திட்டமாக, 'நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்' உள்ளது.

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளை, நிலம் உடையவர்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

அதன்படி, விவசாய நிலம் வாங்க, நிலத்தின் சந்தை மதிப்பில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில், 18 முதல், 55 வயதிற்கு உட்பட்ட, நிலமற்ற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெற தகுதியானவர்கள். கடந்த 2023 -- 2024ம் நிதியாண்டில், 175 நிலமற்ற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, நிலம் வாங்க, 8.50 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டுக்கு, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிதியில், இதுவரை, 408 நிலமற்ற விவசாயிகளுக்கு, 19.98 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மானியம் கேட்டு அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே, வரும் நிதியாண்டில் அரசிடம் கூடுதல் நிதி கேட்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement