கார்கில் நகரில் ரூ.10 கோடியில் ராட்சத குளம் வாரிய குடியிருப்புகளுக்கு பாதிப்பு?

திருவொற்றியூர் கார்கில்நகரில், 10 கோடி ரூபாய் செலவில் ராட்சத குளம் அமைக்கப்பட உள்ள நிலையில், அருகேயுள்ள 11 அடுக்கு மாடிகள் உடைய நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் பாதிக்குமா என்ற அச்சம், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
திருவொற்றியூர், மேற்கு பகுதிகளான அம்பேத்கர் நகர், ராஜா சண்முகம் நகர், சரஸ்வதி நகர் உட்பட 30க்கும் மேற்பட்ட நகர்களில் வடியும் மழைநீர், வடிகால்கள் வழியாக, 10 ஏக்கர் பரப்பில் கார்கில் நகர் - கழிவெளி புறம்போக்கு நிலத்தை வந்தடையும்.
11 மாடி
அங்கு தேங்கும் மழைநீர், மின்மோட்டார்கள் வழியாக, பகிங்ஹாம் கால்வாய்க்கு கடத்தப்படும். வெள்ள காலங்களில் இந்த கழிவெளி நிலத்தின் பயன்பாடு அவசியம்.
சில ஆண்டுகளுக்கு முன், இந்த நிலத்தின் ஒரு பகுதியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 130 கோடி ரூபாய் செலவில், 11 அடுக்குமாடிகள் உடைய 1,200 வீடுகள் கட்டும் பணி, ஏற்கனவே தயாரான கான்கிரீட் சுவர்களை இணைத்து, கட்டமைக்கும் தொழில்நுட்பத்தில் முடிக்கப்பட்டது.
இந்த குடியிருப்புகளை, சில மாதங்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். வீடுகள் இன்னும், மக்களுக்கு ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த குடியிருப்பு அருகேயே, மழைநீர் தேங்கும் வகையில், ராட்சத குளம் அமைக்கும் பணியை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
அகலம் 330 அடி, 155 அடி நீளம், 11.5 அடி ஆழத்தில் குளம் கட்டமைக்கப்படுகிறது. அருகில், மற்றொரு சிறிய குளமும் அமைக்கப்படுகிறது.
பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அருகேயே, ராட்சத பள்ளம் தோண்டி குளம் அமைப்பதால், குடியிருப்பு கட்டடம் பாதிக்குமா என்ற அச்சம், மக்களிடம் எழுந்துள்ளது.
தீர்வு
இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
அடுக்குமாடி குடியிருப்புகளின் அடித்தளம், 38 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. குளமோ, 3.5 மீட்டர் ஆழத்தில்தான் அமைக்கப்படுகிறது. குளம் அமைக்கும் பணியால், வாரிய குடியிருப்புகளுக்கு எந்த பாதிப்பும் வராது.
இந்த பகுதிகள் மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்குவது வாடிக்கையாக உள்ளது. மழைநீர் வெளியேற தேவையான கட்டமைப்பு அவசியம் என்பதால், குளம் அமைக்கப்படுகிறது.
இது, நீண்ட கால பிரச்னைக்கு தீர்வாக அமையும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
--- நமது நிருபர் -
மேலும்
-
6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு