டில்லி பெண்களுக்கு மார்ச் 8 முதல் கிடைக்கும் ரூ.2,5-00! முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தா அறிவிப்பு

புதுடில்லி :டில்லியின் முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த ரேகா குப்தா, 50, நேற்று பதவியேற்றார். அவருடன், ஆறு பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்த, தகுதியுள்ள பெண்களுக்கு மாதம், 2,500 உதவித் தொகை வழங்கும் திட்டம், சர்வதேச மகளிர் தினமான, மார்ச், 8ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

தேசிய தலைநகர் டில்லி சட்டசபைக்கு கடந்த, 5ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 48ல் வென்று பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது.

கடந்த, 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, 22 தொகுதிகளில் வென்றது. அதன் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியில் தோல்வியடைந்தார்.

6 அமைச்சர்கள்

முதல்வராகும் வாய்ப்புள்ளதாக பலருடைய பெயர்கள் உலாவந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், முதல் முறை எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தாவை அந்தப் பதவிக்கு, பா.ஜ., தலைமை அறிவித்தது.

ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பில் இருந்துள்ள ரேகா குப்தா, கவுன்சிலர், மேயர் பதவிகளை வகித்துள்ளார். பா.ஜ.,விலும் இளைஞர் பிரிவு, பெண்கள் பிரிவில் பொறுப்புகளை வகித்துள்ளார். முதல் முறையாக எம்.எல்.ஏ.,வாகியுள்ள அவர், டில்லியின் ஒன்பதாவது முதல்வராக நேற்று பதவியேற்றார்.

அவருக்கு துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் என, பலரும் பங்கேற்றனர்.

இதைத் தவிர, பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில், 50,000க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களும் பங்கேற்றனர். ரேகாவுடன், 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். கெஜ்ரிவாலை தோற்கடித்த, முன்னாள் முதல்வர் ஷாஹிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மா முதலில் பதவியேற்றார். இதைத் தவிர, கபில் மிஸ்ரா, மஜிந்தர் சிங் சிர்சா, ஆஷிஷ் சூட், ரவிந்தர் இந்த்ரஜ் சிங், பங்கஜ் குமார் சிங் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பிரதமர் வாழ்த்து

பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், 'அடிமட்டத்தில் இருந்து வந்துள்ள ரேகா குப்தா, பல்கலை, மாநில அளவில் அரசியல் பதவிகளை வகித்துள்ளார்.

'மாநகராட்சி நிர்வாகத்தில் பங்கேற்றுள்ள அவர் முதல் முறையாக எம்.எல்.ஏ.,வாகவும், முதல்வராகவும் பதவியேற்றுள்ளார். டில்லியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவர் பணியாற்றுவார் என்றும், பலனளிக்கும் அரசை வழங்குவார் என்றும் முழுமையாக நம்புகிறேன்' என, பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பதவியேற்பு விழாவுக்கு முன், ரேகா குப்தா கூறியுள்ளதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் கனவுகளை நிறைவேற்றுவதுதான், 48 எம்.எல்.ஏ.,க்களின் பொறுப்பாகும். கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளின்படி, பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும். சர்வதேச மகளிர் தினமான, மார்ச், 8ம் தேதி, டில்லி பெண்களின் வங்கிக் கணக்கில் முதல் தவணை செலுத்தப்படும்.

கடந்த, 10 ஆண்டுகளில் நடந்தவற்றுக்கு, ஆம் ஆத்மியை பொறுப்பாக்குவோம். டில்லி மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். ஒவ்வொரு காசுக்கும் அவர்களை பொறுப்பாக்குவோம்.

பிரதமர் மோடி கூறியுள்ளதுபோல், யமுனை நதியை துாய்மைப்படுத்துவதை முதன்மையான பணியாக செயல்படுத்துவோம். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சட்டசபைக்கு சென்றனர். அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அங்கு முதல் அமைச்சரவை கூட்டமும் நடத்தப்பட்டது. மேலும், யமுனை நதிக்கரைக்குச் சென்று, ஆரத்தி நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்றனர்.

இதற்கிடையே, அமைச்சர்களுக்கான இலாகாக்கள் நேற்று மாலை ஒதுக்கப்பட்டன.



சபாநாயகர் தேர்வு!

டில்லியின் புதிய அரசில், ஆறு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். ஜாதி மற்றும் பிராந்திய கணக்குகளின் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மஜிந்தர் சிங் சிர்சா, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர். பர்வேஷ் வர்மா, ஜாட் சமூகத்தின் பிரபலமான தலைவர். கபில் மிஸ்ரா, கட்சியின் பிராமண முகமாக பார்க்கப்படுகிறார். ஆஷிஷ் சூட், பஞ்சாபி காத்ரி சமூகத்தைச் சேர்ந்தவர். ரவிந்தர் இந்த்ரஜ் சிங், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.முதல் முறை எம்.எல்.ஏ.,வாகியுள்ள பங்கஜ் குமார் சிங், பல் மருத்துவர். பூர்வாஞ்சல் எனப்படும் பீஹார் மற்றும் உ.பி.,யில் இருந்து வந்த சமூகத்தைச் சேர்ந்தவர்.பா.ஜ., மூத்த தலைவரும், ரோஹினி தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வருமானவிஜேந்தர் குப்தா, புதிய சபாநாயகராக அறிவிக்கப்பட்டுஉள்ளார். மோகன் பிஷ்ட், துணை சபாநாயகராகிறார்.கடந்த, 2015ல், ஆம் ஆத்மி ஆட்சி யின்போது சட்டசபையில் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, விஜேந்தர் குப்தாவை வெளியேற உத்தரவிடப்பட்டது. ஆனால், அதை அவர் நிராகரித்து சபையிலேயே இருந்தார்.அதைத் தொடர்ந்து, சபை காவலர்கள் அவரை குண்டுகட்டாக துாக்கி வெளியேற்றினர். தற்போது அதே சபையின் சபாநாயகராக அவர் பதவி ஏற்க உள்ளார்.



மாலிவால் பங்கேற்பு!

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யான ஸ்வாதி மாலிவால், புதிய அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். டில்லி மகளிர் கமிஷன் முன்னாள் தலைவரான அவர், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து, கட்சிக்கு எதிராக தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இருப்பினும் கட்சியில் தொடர்கிறார். பதவியேற்பு விழாவுக்கு அமைக்கப்பட்டிருந்த மூன்று மேடைகளில் ஒன்றில், டில்லி காங்., தலைவர் தேவேந்தர் யாதவ் அருகில் அவர் அமர்ந்திருந்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.



'இமயமலைக்கு போறீங்களா?'

பதவியேற்பு விழாவில் பங்கேற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தார். ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசத் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மஹாராஷ்டிரா துணை முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.ஆந்திரா துணை முதல்வரும், நடிகரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாணுடன் மோடி சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தார். தற்போது உபவாசத்தில் உள்ள பவன் கல்யாண், பல கோவில்களுக்கு சென்று வருகிறார். நீண்ட தலைமுடியுடனும், தாடியுடனும், எளிய உடையை அணிந்திருந்தார். அவரைப் பார்த்து, ''நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இமயமலை போகப் போகிறீர்களா,'' என, மோடி சிரித்தபடி கேட்டார்.''நான் எங்கும் போகவில்லை. செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. இமயமலை காத்திருக்கலாம்,'' என, பவன் கல்யாண் சிரித்தபடியே பதிலளித்தார்.

Advertisement