தேசிய பாரா தடகள போட்டியில் ஏராளமான குளறுபடிகள் விளையாட்டு வீரர்களுக்கு குடிநீர் கூட தரப்படவில்லை
சென்னை:சென்னையில் நடந்து முடிந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான, 23வது தேசிய பாரா தடகளப் போட்டியில், பல்வேறு குளறுபடிகள் நடந்ததால், வீரர் - வீராங்கனையர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சென்னை பெரியமேடில், கடந்த 18 முதல், 20ம் தேதி வரை, தேசிய பாரா தடகளப் போட்டிகள் நடந்தன. பல்வேறு மாநிலங்களில் இருந்து, 1,400க்கும் அதிகமான, விளையாட்டு வீரர்கள் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், தமிழகம் இரண்டாம் இடம் பிடித்தது. இரண்டு தேசிய சாதனைகளுடன், 17 தங்கம் வென்றும் அசத்தியது.
குளறுபடி
போட்டிகளில் பங்கேற்க, பல மாநிலத்தில் இருந்து வந்த வீரர் - வீராங்கனையருக்கு, தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகள் பாராட்டும் அளவுக்கு செய்து கொடுக்கப்பட்டிருந்தன. அதேநேரம், வீரர் - வீராங்கனையர் வேதனை அடையும் அளவுக்கு சில குளறுபடிகளும் நடந்தன.
போட்டி நடந்த நாள் முழுதும், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க ஆள் இல்லை. மைதானத்தில் எங்கும் தண்ணீர் வசதியும் செய்யப்பட வில்லை. தேசிய அளவிலான போட்டி குறித்து, பெரிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை.
இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற போட்டியை காண, பார்வையாளர்கள் யாரும் வரவில்லை.
குறைந்தபட்சம் பள்ளி மாணவ - மாணவியரையாவது அழைத்து வந்திருக்கலாம். அதற்கும் ஏற்பாடு செய்யவில்லை. உற்சாகப்படுத்த யாரும் இல்லாமலேயே, வீரர் - வீராங்கனையர் போட்டியில் பங்கேற்றனர்.
வேதனையின் உச்சம்
சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகள், சிறப்பு இல்லங்கள், 94 இயங்கி வருகின்றன. அங்குள்ள மாணவர்களை அழைத்து வந்திருந்தால், விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி இருப்பர். அவர்களுக்கும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கும்.
போட்டியை, 3.5 கோடி ரூபாய் செலவில் நடத்தியவர்களுக்கு, போட்டி நிறைவு விழாவில், விளையாட்டு வீரர் - வீராங்கனையர் அமர, நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட ஏற்படவில்லை. அவர்கள் இரண்டு மணி நேரம் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
மேடையில் பரிசு கொடுத்து பாராட்டிய பின், அதை தட்டிப் பறிப்பது, எந்த வகையில் சரி என்பதை, பாரா கூட்டமைப்பு தான் கூறவேண்டும். தேசிய அளவிலான போட்டியில், எந்த அணி வென்றது என, முடிவு அறிவிப்பதில் ஏகப்பட்ட குளறுபடி ஏற்பட்டது, வேதனையின் உச்சம்.
விருப்பம்
ஒட்டுமொத்த பதக்கம் வென்ற அணிகளில், ராஜஸ்தான் அணிக்கு மூன்றாம் இடம் என்று அறிவித்து விட்டு, பின்னர் உத்தர பிரதேசம் என்றனர்.
இனிவரும் போட்டிகளிலாவது, இதுபோன்ற குளறுபடிகள் இல்லாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அனைவருடைய விருப்பமாக உள்ளது.
மேலும்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா
-
ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.14 கோடி முறைகேடு: ராமதாஸ் காட்டம்
-
மாயமான கல்லூரி மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு; ஒருதலை காதலா என விசாரணை
-
கட்சிக்கு இது களையுதிர் காலம்; சீமான்