இரு குழந்தைகள் உட்பட 4 பேர் உடல்களை ஒப்படைத்தது ஹமாஸ்

ஜெருசலேம்,:ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பெண், அவரின் இரு குழந்தைகள் உட்பட நான்கு பேரின் உடல்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று ஒப்படைத்தனர்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, கடந்த 2023 அக்., 7ல் எதிர்பாராத தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 200 பேரை பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றனர்.

இதனால், ஹமாசை அழித்தொழிப்பது என்ற குறிக்கோளுடன் காசா மீது 15 மாதங்களாக கடும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.

இதில் ஹமாஸ் பயங்கரவாதிகள், பொதுமக்கள் என 48,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஐ.நா., முயற்சியால் ஜன., 19 முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரு நாடுகளும் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டனர். இதுவரை, 19 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பதிலுக்கு, இஸ்ரேலும் சில கைதிகளை விடுவித்தது.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட நான்கு பேரின் உடல்களை, அவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

இறந்தவர்கள் ஷிரி பி பாஸ் 32, அவரது மகன்கள் ஏரியல் 4, கிபிர், 1, மற்றும் ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் ஓடெட் லிப்ஷிட்ஸ், 83, என தெரியவந்துள்ளது.

நால்வரின் உடல்களை பெற்ற இஸ்ரேல், டி.என்.ஏ., பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும், நவம்பர் 2023ல் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்தது. இஸ்ரேல் அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர்.

Advertisement