எம்.ஜி.ஆர்.நகரில் பெருக்கெடுத்த கழிவு நீர் வீடுகளுக்குள் முடங்கி தவித்த மக்கள்

சென்னை, கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட, அசோக் நகர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர்., உள்ளிட்ட ஐந்து இடங்களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் இருந்து, அண்ணா பிரதான சாலையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, 31 கோடி ரூபாய் செலவில் புதிதாக குழாய் அமைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் நள்ளிரவு, குழாய்கள் வழியாக கழிவுநீரை வெளியேற்றி ஊழியர்கள் சரிபார்த்துள்ளனர். அப்போது எம்.ஜி.ஆர்.நகர், சக்தி விநாயகர் தெருவில் அமைக்கப்பட்டிருந்த குழாயில் விரிசல் ஏற்பட்டு, சாலையில் கழிவு நீர் பாய்ந்தோடி குளம் போல் தேங்கியது.

இதனால், அப்பகுதிவாசிகள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். மேலும், அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசியதால், குடியிருப்பு மக்கள் தங்களது வீட்டு ஜன்னலைக் கூட திறந்து வைக்க முடியாமல் அல்லல்பட்டனர்.

இதுகுறித்து அறிந்த குடிநீர் வாரிய ஊழியர்கள்,குழாயில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர். மேலும், சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றியதுடன், தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக 'ப்ளீச்சிங்' பவுடர் போட்டனர்.

Advertisement