கலவரம் நடப்பதாக கவனத்தை திசை திருப்பும் ஈரானிய கொள்ளையர் போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை

சென்னை:'கலவரம் நடப்பதாக கவனத்தை திசை திருப்பி, நகை பறிப்பில் ஈடுபடும் ஈரானிய கொள்ளையரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 1970களில், ஈரான் நாட்டைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், மஹாராஷ்டிர மாநிலம் அம்புவேலி பகுதியில் குடியேறினர். அவர்களின் வாரிசுகள், ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் காரமடை, திருப்பத்துார், மணிப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இவர்களின் பிரதான தொழிலே திருடுவது தான். இதனால், ஈரானிய கொள்ளையர் என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் ராணுவ வீரர்கள் போல தோற்றமளிப்பர்; தொப்பி அணியும் பழக்கம் உள்ளவர்கள். போலீஸ் போல சீருடை அணிவர். கும்பலாக விமானத்திலும், காரிலும் வருவர். அதிகபட்சம் ஒரு வாரம் மட்டுமே தங்குவர்.

நடந்து செல்லும் பெண்கள் மற்றும் மூதாட்டிகளிடம், 'நாங்கள் போலீஸ், நீங்கள் செல்லும் வழியில் கலவரம் நடக்கிறது. இவ்வளவு நகையை அணிந்து செல்ல வேண்டாம்; கழற்றி தாருங்கள்; நாங்கள் பத்திரமாக மடித்து தருகிறோம்' என்று கூறுவர்.

போலீஸ் தானே என நம்பி நகையை கழற்றி கொடுத்தால், மடித்து தருவது போல பொட்டலத்தில் கற்களை வைத்துவிட்டு, நகையை வழிப்பறி செய்து விடுவர். அவர்களுக்கு, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என, 10க்கும் மேற்பட்ட மொழிகள் தெரியும். இதனால், அந்தந்த மாநில மொழிகளில் சரளமாக பேசி, நகை, பணம் பறிப்பில் ஈடுபடுவர்.

கடந்த 2018ல், சென்னையில் 15 பேர் கைதாகினர். இவர்களிடம் இருந்து, 104 சவரன் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தின் விலை ஏற்றம் காரணமாக, செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தற்போது, ஈரானிய கொள்ளையர் ஊடுருவி இருக்கும் தகவலும் கிடைத்துள்ளது. இதனால், பொதுமக்கள் போலீஸ் போல நடித்து நகை பறிக்கும் ஈரானிய கொள்ளையரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement