விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா

37


புதுடில்லி: விமானத்தில் உடைந்த இருக்கையில் அமர்ந்து, சிரமப்பட்டு பயணத்ததாக புகார் கூறிய மத்திய வேளாண் துறை அமைச்சர் சவுகானிடம் ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கோரியது.


மத்திய பிரதேச மாநிலம், போபாலில் இருந்து டில்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்ற போது, கிடைத்த மோசமான அனுபவத்தை, மத்திய வேளாண் துறை அமைச்சர் சவுகான் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். அவர் அந்த பதிவில் கூறியதாவது:


இன்று நான் இயற்கை வேளாண்மை தொடர்பான ஒரு விழாவை தொடங்கி வைப்பதற்காக, போபாலில் இருந்து டில்லிக்கு பயணிக்க வேண்டியிருந்தது. ஏர் இந்தியா விமானத்தில் (ஏ.ஐ,436) டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தேன். எனக்கு, எண் 8c இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
விமானத்தில் சென்று இருக்கையில் அமர்ந்தபோது, அது உடைந்து கீழே இறங்கி இருந்தது. இருக்கையில் அமரும் போது கஷ்டமாக இருந்தது.


இருக்கை மோசமாக இருப்பது பற்றி விமான ஊழியர்களிடம் கேட்டபோது, 'இந்த இருக்கை சரியில்லை, இதன் டிக்கெட்டை விற்கக்கூடாது என்று நிர்வாகத்திற்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாகவும், அப்படி இருந்தும் டிக்கெட் விற்று விட்டதாகவும்' அவர்கள் கூறினர்.
விமானத்தில் என்னுடன் பயணம் செய்த சக பயணிகள் அவர்கள் இருக்கையில் அமருமாறு கேட்டுகொண்டார்கள்.


ஆனால் நான் மறுப்பு தெரிவித்து விட்டேன். எனக்காக இன்னொரு நபரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதே இருக்கையில் அமர்ந்து எனது பயணத்தை மேற்கொண்டேன். டாடா நிர்வாகம் வாங்கிய பிறகு ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவை மேம்பட்டு இருக்கும் என நினைத்தேன். ஆனால் எந்த மாற்றமும் இல்லை.



கீழிறங்கிய இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ததில் எனக்கு எந்த கவலையும் இல்லை. முழு கட்டணத்தையும் வசூலித்த பிறகு இப்படி உடைந்த இருக்கையில் உட்கார வைப்பது நியாயமா? இது பயணிகளை ஏமாற்றும் செயல் இல்லையா? எதிர்காலத்தில் எந்தவொரு பயணியும் இதுபோன்ற சிரமத்தை எதிர்கொள்ளாமல் இருக்க ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? இது போல்தான் பயணிகள் சிரமத்தை எதிர்க்கொள்ள நேரிடுமா? என சவுகான் கேள்வி எழுப்பி இருந்தார்.

மன்னித்து விடுங்கள்!



இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அமைச்சர் சவுகானிடம் மன்னிப்பு கேட்டது. "ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நிகழாமல் தடுக்க இந்த விஷயத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம்' என ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement