திருத்தணி முருகன் கோவிலில் அபிேஷக நேரத்திலும் தரிசிக்கலாம்
திருத்தணி திருத்தணி முருகனை தரிசிக்க, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். காலை, 6:00 மணி முதல், இரவு, 8:45 மணி வரை கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
காலை, 8:00 மணி, மதியம், 12:00 மணி, மாலை, 5:00 மணி என மூன்று வேளைகளில், மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை தினமும் நடைபெறும். இதில் பங்கேற்க, பக்தர்கள் பணம் கொடுத்து, அபிஷேக டிக்கெட் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
அதிகபட்சமாக 35 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே மூலவருக்கு நடக்கும் அபிஷேகத்தை அமர்ந்து பார்க்க முடியும். அபிஷேகத்திற்கு உள்ளே சென்ற பக்தர்கள், சுவாமி தரிசனத்தை முடித்து வர ஒன்றரை மணி நேரம் ஆகிவிடும்.
அதன்பிறகே, பொதுவழி மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசன பக்தர்கள், மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். இப்படி மூன்று கால அபிஷேகத்தில், நான்கு மணி நேரம் பொதுவழி, சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
இதனால், பக்தர்கள் நலன்கருதி, கோவில் நிர்வாகம் புதிய முயற்சி எடுத்துள்ளது. முதற்கட்டமாக, கோவில் முக்கிய விழாக்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில், அபிஷேகத்திற்கு, 15 டிக்கெட்டுகள் மட்டும் முன்பதிவு செய்து, 30 பேரை மட்டும் உட்கார வைக்க முடிவு செய்துள்ளது.
அதே நேரத்தில், பொது வழி மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும், தடையின்றி மூலவரை தரிசித்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவிலுக்கு அதிகளவில் கூட்டம் வருவதால், அபிஷேக டிக்கெட்டுகள் எண்ணிக்கையை குறைத்து, பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்ய, புதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளோம். இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா