நிலம் வாங்கி தருவதாக மோசடி மாநகராட்சி ஊழியர் மீது வழக்கு

சென்னை,நிலம் வாங்கித் தருவதாக கூறி, 1.76 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் மீது, குமரன் நகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த, மாநகராட்சி ஊழியர் சாந்தி, 45, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:

தன்னுடன் கோடம்பாக்கம் மண்டலத்தில், மாநகராட்சி பூங்கா பராமரிப்பு ஊழியராக, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சித்ரா, 47, பணியாற்றி வருகிறார்.

அவர், கோவூர் பகுதியில் நிலம் வாங்கி தருவதாக, 2023ல் தன்னிடம் இருந்து, 1.76 லட்சம் ரூபாய் வாங்கினார்.

வாக்குறுதி அளித்தபடி நிலத்தை வாங்கி தரவில்லை; பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.

கமிஷனர் அலுவலக உத்தரவுப்படி, குமரன் நகர் போலீசார், மாநகராட்சி ஊழியர் சித்ரா மீது, பண மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement