கொசுவை கட்டுப்படுத்துங்க! மேயரிடம் நல சங்கம் மனு

கொடுங்கையூர், சென்னையில் கொசுத் தொல்லை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி போதிய கவனம் செலுத்தாதது குறித்து, சில தினங்களுக்கு முன், நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.

இந்நிலையில், கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தும்படி, வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சண்முகம், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிடம், நேற்று மனு அளித்தார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

வீடுகளில் தேங்கும் நீரால் உருவாகும் கொசு, பகிங்ஹாம், கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை கால்வாய் உள்ளிட்ட வரத்து கால்வாய்களில் உருவாகிறது. கொசு புழுக்களை சாப்பிடும் பூச்சிகளை வளர்க்க வேண்டும்.

கொசுவை ஒழிக்க ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மருந்து தெளிக்க வேண்டும். போதிய தொழிலாளர் இல்லாததால், 25 நாட்களுக்கு ஒரு முறை தான் மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால் மருந்து அடித்தும் பயனின்றி மீண்டும் கொசு உற்பத்தி நடக்கிறது.

போதிய பணியாளர்களை நியமித்து, வடசென்னையில் மிக அதிகமான கொசுத் தொல்லைகளால் பாதிக்கப்படும் இடங்களில், தினமும் மருந்து தெளிப்பதை உறுதி செய்ய வேண்டும். கொசுவின் வீரியம் அதிகமாக உள்ளதால், மருந்தின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

நீர் நிலைகளில் கழிவுநீரை கொட்டும் வண்டிகளை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement