முன்பதிவு இல்லாத பெட்டிகளை குறைக்கவில்லை தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னை,:'விரைவு ரயில்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை; மாறாக அதிகரித்து வருகிறோம்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

சில ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை, தெற்கு ரயில்வே குறைத்துள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. கடந்த மாதம் முதல் அனைத்து விரைவு ரயில்களிலும், முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டது. இதற்காக, ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.

எனினும், மஹா கும்பமேளா நிகழ்வுக்கு, ரயில் பெட்டிகள் தேவைப்பட்டதால், கூடுதலாக தயாரிக்கப்பட்ட அனைத்து பெட்டிகளையும் இணைத்து, சிறப்பு ரயில்களாக பிரயாக்ராஜுக்கு இயக்கப்படுகின்றன.

அடுத்த மாதம் முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரித்து, ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பட்டியலும் தயாராக உள்ளது. அதன் விபரம்:

 ஈரோடு - சென்னை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத், சென்னை - நாகர்கோவில், புதுச்சேரி - மங்களூரு, விழுப்புரம் - கோரக்பூர், புதுச்சேரி - கன்னியாகுமரி, சென்னை - பாலக்காடு, திருநெல்வேலி - புருலியா விரைவு ரயில்களில், தற்போதுள்ள மூன்று முன்பதிவு இல்லாத பெட்டிகள் அடுத்த மாதம் முதல் நான்காக அதிகரித்து இயக்கப்படும்

 சென்னை - திருவனந்த புரம், சென்னை - ஆலப்புழா, சென்னை - மைசூர் விரைவு ரயில்களில், தற்போதுள்ள இரண்டு முன்பதிவு இல்லாத பெட்டிகள், அடுத்த மாதம் முதல் நான்காக அதிகரிக்கப்படும்.

மொத்தம், 14 விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. வரும் மாதங்களில், மற்ற ரயில்களிலும், தலா நான்கு முன்பதிவு பெட்டிகள் வரை இணைத்து இயக்க, ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, சமூக வலைதளங்களில் பரவும், தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement