ஸ்கூட்டர் 'சீட்'டை உடைத்து ரூ.5 லட்சம் திருடியவர் கைது

ஏழுகிணறு,கொண்டித்தோப்பு, கண்ணையா தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர், 64. இவர், பிராட்வே, அண்ணாப்பிள்ளை தெருவில் மிளகாய் மண்டி நடத்தி வருகிறார்.

இவர், ஜன., 27ம் தேதி இரவு வியாபாரம்முடித்து 5 லட்ச ரூபாயை, தன் ஸ்கூட்டரின் டிக்கியில் வைத்து எடுத்து சென்று, அவரது வீட்டின் முன் நிறுத்தினார். ஆனால், பணத்தை எடுக்காமல் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

நள்ளிரவு 11:30 மணியளவில், ஸ்கூட்டரில் பணம் வைத்திருந்ததுஞாபகத்திற்கு வர, பணத்தை எடுக்க சென்றுள்ளார். அப்போது, ஸ்கூட்டரின் சீட் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 லட்ச ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து ஏழுகிணறு போலீசார் விசாரித்தனர். இதில், கொடுங்கையூர், தென்றல் நகரைச் சேர்ந்த அஜித்குமார், 21, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

போலீசார் நேற்று அவரை கைது செய்து, 10,000 ரூபாயை மீட்டனர். கைது செய்யப்பட்ட அஜித்குமார் மீது, 11 வழக்குகள் உள்ளன.

Advertisement