வங்கிகளில் நோடல் அதிகாரி கூடுதல் டி.ஜி.பி., உத்தரவு

சென்னை:'பண மோசடி தொடர்பாக, மாலை, 6:00 மணியில் இருந்து, மறுநாள் 10:00 மணிக்குள், சைபர் குற்றவாளிகளின் கணக்குகளை முடக்க, வங்கிகளில் நோடல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்' என, கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள, சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தில், 30 வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சந்தீப் மிட்டல் கூறியதாவது:

பண மோசடிகள் குறித்து, 1930 என்ற எண்களில் புகார் பதிவாகும் போது, மாலை, 6:00 மணியில் இருந்து, மறுநாள் 10:00 மணி வரை, சைபர் குற்றங்களில் ஈடுபட்ட, சந்தேக நபர்களின் வங்கி கணக்குகளை முடக்க, 'நோடல்' அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பல வழக்குகளில் புலனாய்வு அதிகாரிகளால் முடக்கப்பட்ட தொகை, நீதிமன்ற உத்தரவை மீறி, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திருப்பி தரப்படாமல் உள்ளது.

இந்த தொகையை உடனடியாக அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சைபர் குற்றங்களை தடுக்க, விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

இதனால், வங்கி கிளை அலுவலகங்கள் மற்றும் ஏ.டி.எம்., மையங்களில், 1930 என்ற எண்களை விளம்பரம் செய்து, ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement