ரூ.10 கோடி சொத்து முடக்கம் இயக்குனர் ஷங்கர் விளக்கம்

சென்னை:'சொத்து முடக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்' என, சினிமா பட இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

எந்திரன் பட விவகாரம் தொடர்பாக, சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், இயக்குனர் ஷங்கரின், 10.11 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

இதற்கு விளக்கம் அளித்து, ஷங்கர் கூறியிருப்பதாவது:

அசையாச் சொத்துக்கள் முடக்கம் குறித்து அமலாக்க துறையிடம் இருந்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை.

எந்திரன் படம் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடிப்படையில், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், மிகவும் வருத்தமடைகிறேன். குற்றச்சாட்டு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

இரு தரப்பு ஆதாரங்கள், வாதங்களை ஆராய்ந்து எழுத்தாளர் ஆருர் தமிழ்நாடனின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இத்தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் வெறும் புகார் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் என் சொத்துக்களை முடக்கி உள்ளனர்.

அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வர் என்று, நம்புகிறேன். இல்லையென்றால், அமலாக்கத்துறை அதிகாரிகளின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement