கல்வியில் தமிழக அரசு வீண் அரசியல் செய்ய வேண்டாம்: அண்ணாமலை

சென்னை:'கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் இணைந்து, பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துஉள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு, தமிழக அரசு வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, 'ஹிந்தி தவிர்த்து, பிற மொழிகள் கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை' என்று கூறியிருக்கிறது. மத்திய அரசு ஹிந்தியை மட்டுமே மூன்றாவது மொழியாக கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக் கொண்ட தமிழக அரசுக்கு நன்றி.
ஏற்கனவே, பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் போது, உடனே நீங்கள் வேறு இந்திய மொழிகளுக்கான ஆசிரியர்களை நியமித்து விடுவீர்கள் என, தி.முக., அரசை அறிந்த யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
ஆனால், அதற்கான பணிகளை அரசு துவங்கலாம். தமிழகம் முழுதும் அரசு பள்ளி மாணவர்களிடம் கருத்து கணிப்பு மேற்கொண்டு, எந்தெந்த மொழிகளை கற்க மாணவர்கள் விரும்புகின்றனர் என்பதை முடிவு செய்து, அதன் அடிப்படையில் அந்தந்த மொழிகளை பயிற்றுவிக்க, ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை துவக்க வேண்டும்.
மேலும், தி.மு.க., அரசு நினைத்தால், தமிழ் மொழியில் பட்டம் பெற்று, ஆசிரியர் பணி கனவுடன் இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, அண்டை மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில், ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம்.
எனவே, கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா