தோல் பொருட்கள் கழிவில் இருந்து கிடைத்த உப்பு ஆலைக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பம் உருவாக்கம்
சென்னை:தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில் இருந்து கிடைத்த உப்பை, உரம் தயாரிப்பு தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனமும், மத்திய உப்பு மற்றும் கடல் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ளன.
இதை, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தியாவில், கால்நடைகளின் தோலை பதப்படுத்தி, அந்த தோலில் இருந்து காலணி, மணிபர்ஸ் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டின் தோல் பொருட்கள் உற்பத்தியில், தமிழகத்தின் பங்கு, 40 சதவீதம். தோல் தொழிற்சாலைகளில், பல வகை வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, அந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதைத்தடுக்க, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் பத்து
அதன்படி, தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களில், தோல் தொழிற்சாலைகள் இணைந்து, பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த தொழிலுக்காக நாட்டில் உள்ள, 19 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில், தமிழகத்தில், 10 நிலையங்கள் உள்ளன.
இவற்றில், தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில், பெரும்பான்மை நன்னீராக மாற்றப்பட்டு, மீண்டும் ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது. மீதி கிடைக்கும் கழிவு உப்பு சேமிக்கப்படுகிறது.
இந்த உப்பை, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் உப்பாக மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தை, சென்னையில் உள்ள சி.எல்.ஆர்.ஐ., எனப்படும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனமும், குஜராத்தில் உள்ள சி.எஸ்.எம்.சி.ஆர்.ஐ., எனப்படும், மத்திய உப்பு மற்றும் கடல் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ளன.
இது, விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இது குறித்து, இந்திய தோல் ஏற்றுமதி கவுன்சிலின் செயல் இயக்குநர் செல்வம் கூறியதாவது:
தோல் தொழில் துறையால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க, உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
தற்போது, தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், பொது சுத்திகரிப்பு நிலையங்களில், 95 சதவீதம் நன்னீராக மாற்றப்பட்டு, மீண்டும் ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
மீதி, 5 சதவீதம் உப்பாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகிறது. இதை, தமிழகம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் கண்காணிக்கின்றன.
நிதி உதவி
தற்போது, 50,000 டன் அளவுக்கு, தோல் கழிவில் இருந்து கிடைத்த உப்பு உள்ளது. இந்த உப்பை, உரம் சார்ந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்த கூடிய உப்பாக மாற்றும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு, மத்திய, மாநில அரசுகளிடம் நிதியுதவி கேட்கப்பட்டு உள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இதனால், தோல் தொழிற்சாலையில் இருந்து கழிவு வெளியேறுவது, 100 சதவீதம் தடுக்கப்படும். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா