அவதுாறு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருகிறது கல்வித்துறை;   மாநில நிர்வாக தீர்ப்பாயம் ஏற்படுத்த வலியுறுத்தல்

மதுரை: அவதுாறு வழக்கு ஒன்றில் மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் சி.இ.ஓ., ஒருவருக்கு சிறை தண்டனை, அபராதம் விதித்த நடவடிக்கையை அடுத்து மாநில அளவில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


அரசு, உதவிபெறும், சிறுபான்மை பள்ளிகளில் பணி நியமனங்கள் அனுமதி, பதவி உயர்வு இழுத்தடிப்பு, சம்பள நிர்ணயம், ஊக்கத் தொகை உட்பட பணப் பலன்கள் தொடர்பாக மாநில அளவில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் பெரும்பான்மையான வழக்குகள் உதவிபெறும், சிறுபான்மை பள்ளிகளுக்கு உட்பட்டவை.

ஆசிரியர், அலுவலர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் அதிகாரிகள் அளவிலேயே பேசி முடிக்க வேண்டிய நிலையில் இருந்தாலும் இழுத்தடிப்பு காரணமாக நீதிமன்றங்களில் வழக்குகளாக மாறுகின்றன. அங்கு பிறப்பிக்கப்படும் உத்தரவுகளையும் உரிய முறையில் அதிகாரிகள் பின்பற்றி வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர தவறுவதால் அவதுாறு வழக்குகளை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.


இதன் தொடர்ச்சியாக முதன்முறையாக முதன்மை கல்வி அலுவலர் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் அவதுாறு வழக்குகள் குறித்த விவரங்களை பட்டியலிட்டு, அவற்றின் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய சென்னை, மதுரை சட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம், பதவி உயர்வு, பணப் பலன்கள் தொடர்பான அவதுாறு வழக்குகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு வரை கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.


அதுதொடர்பாகவும், அரசு கொள்கை முடிவுப்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரைவுபடுத்த அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.



தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் பணி தொடர்பான பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்காக 2003 வரை மாநில நிர்வாக தீர்ப்பாயம் செயல்பட்டது. அதற்கு பின் கலைக்கப்பட்டது. இதுபோன்ற தீர்ப்பாயம் இருக்கும்பட்சத்தில் கல்வித்துறை போன்ற பெரிய துறைகள் சார்ந்த வழக்குகள் பெரும்பாலும் தீர்ப்பாயத்திலேயே முடிவு காண வாய்ப்பு ஏற்படும். மேல்முறையீடுகள் தான் நீதிமன்ற வழக்குகளாக மாறும். 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில் தி.மு.க., சார்பில் 310 வது வாக்குறுதியாக அரசு அலுவலர்களின் பணி தொடர்பான பிரச்னைகளை தீர்க்க மாநில நிர்வாக தீர்ப்பாயம் அமைக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. மீண்டும் மாநில தீர்ப்பாயம் வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement