திருவள்ளூர் அரசு அலுவலகங்களுக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு வேலியே பயிரை மேய்கிறது

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், இருளஞ்சேரி ஊராட்சியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, தமிழக அரசு சார்பில், வீடு கட்டும் பணி நடக்கிறது.தலா, 4.30 லட்சம் ரூபாய் மதிப்பில் 30 வீடுகளுக்கு, மொத்தம், 1.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி வழியே செல்லும் மின்கம்பியில் கொக்கி போட்டு மின்சாரம் திருடி, இந்த வீடுகளுக்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.

திருத்தணி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி எல்லம்பள்ளி காலனியில், 16.55 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக அங்கன்வாடி மையம் கட்டி, இம்மாதம் 9ம் தேதி திறக்கப்பட்டது. இங்கு, 20 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

புதிய கட்டடத்திற்கு மின்இணைப்பு பெறாமல் உள்ளது. இதனால், வயல்வெளியில் செல்லும் மின்கம்பத்தில் இருந்து கொக்கி போட்டு, இம்மையத்திற்கு மின்சாரம் எடுக்கப்படுகிறது.

இதேபோல், பெரிய கடம்பூர் ஊராட்சியிலும், அங்கன்வாடி மையத்திற்கு குடிநீர் வசதிக்காக, மின் இணைப்பு பெறாமல், திருட்டு மின்சாரம் எடுக்கப்படுகிறது.

வேலியே பயிரை மேயும் கதையாக, அரசு அலுவலகங்களுக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருடுவது, அப்பகுதியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, அரசு அலுவலகங்களுக்கு மின் இணைப்பு பெற அறிவுறுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement