திருப்பரங்குன்றத்தில் ஜமாத் ஊர்வலம்: மனு தள்ளுபடி

மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி ஊர்வலம் நடத்த அனுமதிக்க முஸ்லிம்ஜமாத் தாக்கல் செய்த மனுவைஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை தெற்குவாசல் மஞ்சணக்காரத் தெரு அத் தக்வா முஸ்லிம் ஜமாத் துணைத் தலைவர் சையது ராஜா தாக்கல் செய்த மனு:
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் சுல்தான் பாதுஷா ஒலியுல்லா தர்கா உள்ளது.

இங்கு முஸ்லிம்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பிப்.20 ல் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி, பாதுகாப்பு கோரி போலீஸ் உதவி கமிஷனரிடம் மனு அளித்தோம். அனுமதி மறுப்பது சட்டவிரோதம் என குறிப்பிட்டார்.நீதிபதி பி.தனபால் விசாரித்தார்.

அரசு தரப்பு: திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடர்பாக இதுவரை 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கு 2 மாதங்களாக பதட்டம் நிலவுகிறது.

மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் அனுமதிக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு ஆட்சேபம் தெரிவித்தது.

நீதிபதி: திருப்பரங்குன்றத்தில் அமைதியின்மை நிலவுகிறது. ஊர்வலம், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement