ஊனமாஞ்சேரி புது சமுதாயக்கூடம் ஓராண்டாக திறக்காததால் அதிருப்தி

ஊனமாஞ்சேரி, ஊனமாஞ்சேரியில், கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு கடந்தும் திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை, உடனே திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊனமாஞ்சேரி ஊராட்சியில், 9 வார்டுகள் உள்ளன. கடந்த 2024 லோக்சபா தேர்தல் கணக்குப்படி, 120 தெருக்களில் 5,642 நபர்கள் வசிக்கின்றனர்.
இங்கு, அப்பகுதிவாசிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2018ல் சமுதாயக்கூடம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி எம்.எல்.ஏ., நிதியின் கீழ், 30 லட்சம் ரூபாய் செலவில், 2,400 சதுர அடி பரப்பில், கடந்த 2020ல் சமுதாயக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால், சாப்பாட்டு அறை வசதியின்றி ஒரே தளமாக கட்டப்பட்டதால், பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது.
இதனால், கடந்த 2022ல், சமுதாயக்கூடத்தின் மேல்தளத்தில் சாப்பாட்டுக்கான இடம் ஒதுக்கப்பட்டு, அதில் 'ஆஸ்பெஸ்டாஸ்' கூரை அமைக்க, எம்.எல்.ஏ., நிதி வாயிலாக 16 லட்சம் ரூபாய் பெறப்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம் பணிகள் நிறைவடைந்தன.
ஆனால், கடந்த ஓராண்டாக சமுதாயக்கூடம் திறக்கப்படவில்லை. இதனால், பகுதிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:
ஊராட்சி மற்றும் சுற்றுப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும்படி, சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தோம்.
இந்நிலையில், இரண்டு கட்டமாக எம்.எல்.ஏ., நிதி பெறப்பட்டு, 46 லட்சம் ரூபாய் செலவில் சமுதாயக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால், ஓராண்டாக சமுதாயக்கூடம் திறக்கப்படாததால் ஏழை, எளியோர் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில் அதிக செலவில் நடத்த வேண்டி உள்ளது.
எனவே, மாவட்ட கலெக்டர் தனி கவனம் செலுத்தி, சமுதாயக்கூடத்தை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு