வெளிநாட்டு கரன்சி கடத்தல் வி.சி., பிரமுகருக்கு தொடர்பு?

சென்னை:பெங்களூரில் இருந்து இலங்கைக்கு, 2.12 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் கடத்தல் விவகாரத்தில், வி.சி., பிரமுகருக்கு தொடர்பு உள்ளதா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து விமானத்தில், இலங்கைக்கு கடத்த இருந்த 2.12 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 19ம் தேதி பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, இலங்கையைச் சேர்ந்த விமல்ராஜ் துரைசிங்கம், திலீபன் ஜெயந்திகுமார், இந்தியாவைச் சேர்ந்த வீரகுமாரை கைது செய்தனர்.

அவர்களுக்கு வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் சென்னையில் கைமாறி உள்ளன. இதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து, கியூ பிரிவு போலீசார், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது:

'இலங்கைக்கு வெளிநாட்டு கரன்சிகளை கடத்த இருந்த கும்பலுடன், தமிழகத்தைச் சேர்ந்த வி.சி., நிர்வாகிக்கு தொடர்பு இருக்கலாம்' என, சந்தேகம் எழுந்துள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பில், முக்கிய பொறுப்பில் இருந்த தமிழ்ச்செல்வன் மனைவிக்கு, போலி ஆவணங்கள் வாயிலாக, பாஸ்போர்ட் வாங்கி கொடுத்த நபரின் பின்னணியில் தான், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கைமாறி இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கைதான நபர்களிடம் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement