இடைக்கழிநாடு பேரூராட்சியில் எல்.இ.டி., விளக்குகள் அவசியம்

செய்யூர்,இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில், 23 கிராமங்கள் உள்ளன.

கிராமங்களில் உள்ள தெருக்கள், பொது இடங்கள், சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி சார்பாக, 33 உயர் கோபுர விளக்கு, 1,742 டியூப் லைட், 1,410 சி.எப்.எல்., 61 எல்.இ.டி., விளக்கு, 7 சோலார் மின் விளக்கு என, 3,253 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில், தற்போது பொருத்தப்பட்டு உள்ள 'டியூப் லைட்' மற்றும் 'சி.எப்.எல்.,' விளக்குகள் அடிக்கடி பழுதடைகின்றன.

மேலும், பலத்த காற்று வீசினால் தெருவிளக்குகள் மின்கம்பத்தில் மோதி உடைந்து விடுவதால், தெரு விளக்குகளை பராமரிக்க அதிக செலவு செய்யப்படுகிறது.

உபயோகப்படுத்தப்படும் மின் விளக்குகளுக்கு, அதிக மின்சாரம் செலவாகிறது.

தற்போது உள்ள டியூப் லைட் மற்றும் சி.எப்.எல்., விளக்குகளை அகற்றி, புதிய எல்.இ.டி., தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், 40 வாட் திறன் கொண்ட 1,000க்கும் மேற்பட்ட எல்.இ.டி., விளக்குகள் வாங்கப்பட்ட நிலையில், அவை பயன்படுத்தப்படாமல் பேரூராட்சி கூட்ட அரங்கில், கடந்த ஆறு மாதங்களாக வீணாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

எனவே பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்விளக்கு பராமரிப்பு செலவு மற்றும் மின்சார பயன்பாட்டை குறைக்க, இடைக்கழிநாடு பேரூராட்சியில் எல்.இ.டி., தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement