செங்கை புத்தக திருவிழாவில் குவிந்த அரசு பள்ளி மாணவர்கள்

செங்கல்பட்டு, செங்கை புத்தகத் திருவிழாவில், அரசு பள்ளி மாணவர்கள் குவிந்து, புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து, ஆறாவது ஆண்டு செங்கை புத்தகத் திருவிழா, செங்கல்பட்டு அலிசன்காசி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் துவங்கி, வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நேற்று, கல்பாக்கம் அணுசக்தித் துறை விஞ்ஞானி சூரியமூர்த்தி, அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி, அறிவியல் தொடர்பான வினாடி - வினா போட்டிகளை நடத்தினார்.

இதில், மாணவர்கள் அதிகமாக பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புத்தகத் திருவிழாவில் தினமும், அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும்தனித்திறன் போட்டிகள் நடக்கின்றன.

இன்று 22ம் தேதி, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தலைமையில், 'பேணாமை பேதை தொழில்' என்ற தலைப்பில், நுாலகத் துறை இயக்குநர் சங்கர் சரவணன், 'காலத்தை வென்ற தமிழிசை' என்ற தலைப்பில் நல்லசிவம் ஆகியோர் பேசுகின்றனர்.

இதில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

Advertisement