பழுதடைந்த அரசு பஸ்களை சீரமைக்க கோரி வழக்கு; உயர்நீதிமன்றம்  தள்ளுபடி

மதுரை: அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் மோசமான நிலையில் உள்ளவற்றை சீரமைக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அரசு பஸ்சின் பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்தது. பயணிகளுக்கு பாதிப்பு இல்லை. சரியான நிர்வாகமின்மை, பராமரிப்பின்மை, ஊழலால் போக்குவரத்துக் கழகம் இழப்பை சந்தித்துள்ளது. தரம் குறைந்த உதிரி பாகங்கள் கொள்முதல் மூலம் முறைகேடு நடக்கிறது. அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் மோசமான நிலையில் உள்ளவற்றை சீரமைத்து இயக்க தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.

தமிழக அரசு தரப்பு: பல புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. பழுதடைந்த பஸ்களை படிப்படியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனுதாரர் மேம்போக்காக பொத்தாம் பொதுவான காரணங்களைக்கூறி மனு செய்துள்ளார்.

இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதிகள்: மனுதாரர் குறிப்பிடும் புகாருக்கு போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement